தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் கடந்த ஐந்து கால ஆட்சியில் தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் கட்டுக்கடங்காமல் பெருகியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, சேலம் கோரிமேடு பகுதியில் 66 வயது மூதாட்டியை இரண்டு பேர் கஞ்சா போதையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ள கொடூரச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அவர் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
”தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் ஆளுங்கட்சியான திமுகவினரே நேரடியாக ஈடுபடுவதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்” என்று அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார். கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் பொதுமக்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள அவர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
