நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் (2026) இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், தொடரின் ஆரம்பக் கட்டத்தில் தான் அனுபவித்த மனப் போராட்டங்கள் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர், பெஞ்சில் அமரவைக்கப்பட்டபோது ஏற்பட்ட வலிகள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்து ‘தொடர் நாயகன்’ விருது வென்றது வரையிலான தனது பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தொடரின் ஆரம்பப் போட்டிகளில் ஆடும் லெவனில் (Playing XI) இடம் கிடைக்காதது குறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது,

“எனது நீண்ட கால கனவான உலகக் கோப்பை கைக்கெட்டும் தூரத்தில் இருந்தபோது, நான் அணியில் இடம் பெறாமல் போனது என்னை நிலைகுலையச் செய்தது. ‘அணியின் கலவைக்காக நான் ஓரங்கட்டப்படுகிறேனா?’ என்ற கேள்வி என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்தச் சமயத்தில் நான் மனதளவில் முற்றிலும் உடைந்து போயிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 5 முதல் 6 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மீண்டும் என்னை நானே செதுக்கத் தொடங்கினேன். ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் நமக்கான வாய்ப்பை வழங்கும் என்பதை உணர்ந்து என்னைத் தயார்படுத்தினேன்.

ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து தொடரின் போது அணியில் இடம்பிடிக்க சக வீரர்களுடன் போட்டியிட்டது குறித்துப் பேசிய அவர்ஃ நான் எனக்காக விளையாடுவதை விட, பிறருக்காகவும் அணிக்காகவும் சிறப்பாகச் செயல்பட விரும்புபவன். அணியில் இடம்பிடிக்க எனது சக வீரர்களுடனேயே போட்டியிடுவது எனக்கு சங்கடமாக இருந்தது. அந்தச் சூழலில் என்னால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை” என்றார்.

சென்னையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர்-8 ஆட்டத்தில் சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. “அந்தப் போட்டியில் நான் பெரிய ரன்கள் எடுக்காவிட்டாலும், அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்தது. அந்த நம்பிக்கைதான் என் மனநிலையை மாற்றியது. அடுத்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், அணியின் தேவைக்காக நான் களமிறங்கியபோது எனக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது” என அவர் குறிப்பிட்டார். மேலும் முன்னதாக ஒரு பேட்டியில் நீ 21 முறை டக் அவுட் ஆனாலும 22 ஆவது முறை உன்னை மீண்டும் அணியில் எடுப்பேன் என கம்பீரத்த தன்னிடம் கூறியதாக சஞ்சு கூறியது குறிப்பிடத்தக்கது.