வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அகா சல்மான் அவுட்டான விதம் மற்றும் அதற்கு அவர் காட்டிய கோபம் தற்போது அவருக்கு வினையாக முடிந்துள்ளது. முகமது ரிஸ்வான் அடித்த பந்து மெதுவாக உருண்டு வர, அதை எடுக்க முயன்ற அகா சல்மான் கிரீஸை விட்டு வெளியே நின்றார். இதைச் சரியாகப் பயன்படுத்திய வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ், மின்னல் வேகத்தில் பந்தைப் பிடித்து பெய்ல்ஸைத் தட்டி ரன்-அவுட் செய்தார். இந்த விசித்திரமான அவுட்டால் ஏமாற்றமடைந்த அகா சல்மான், பெவிலியன் திரும்பும் போது தனது ஆத்திரத்தை கிரிக்கெட் உபகரணங்கள் மீது காட்டியது கேமராக்களில் சிக்கியது.
அகா சல்மானின் இந்த அநாகரீகமான நடத்தையை ஐசிசி (ICC) சும்மா விடவில்லை. மைதானத்தின் உபகரணங்களைச் சேதப்படுத்தியது அல்லது அவமதித்தது தொடர்பான ஐசிசி விதி 2.2-ஐ மீறியதற்காக அவருக்கு அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அவரது ஒழுங்கு நடவடிக்கை கணக்கில் ஒரு ‘டிமெரிட்’ (Demerit) புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுக்கப் போராடிய நேரத்தில், இப்படி ஒரு சர்ச்சைக்குரிய ரன்-அவுட் ஆனது பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
