புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில், மகளைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டாவது மனைவியின் தம்பி விவின், சுரேஷின் முதல் மனைவி காளியம்மாளின் மகள் சுபதர்ஷினியைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால், காளியம்மாளும் அவரது மகளும் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவின், தனது நண்பர்களுடன் சேர்ந்து சுபதர்ஷினியைக் கடத்தத் திட்டமிட்டார். சம்பவத்தன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், விவின் மற்றும் அவரது கூட்டாளிகள் காளியம்மாளின் வீட்டிற்குள் புகுந்து, உறங்கிக் கொண்டிருந்த சுபதர்ஷினியைக் கடத்த முயன்றனர்.

அப்போது சுபதர்ஷினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் காளியம்மாள், தனது மகளைக் காப்பாற்றத் துணிச்சலுடன் போராடினார். இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வடகாடு போலீசார், தப்பியோடிய விவின் மற்றும் அவரது நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.