திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 11-ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மன்னார்குடி தட்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
மேலும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பழகியுள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்தக் கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. குற்றவாளியைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
