தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையிலேயே பெண் காவலருக்கு உயர்மட்ட அதிகாரியால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி (SP) அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியே பெண் காவலருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்திருப்பது, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே உறுதிப்படுத்துவதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களே இப்படி அத்துமீறுவது கடும் கண்டனத்திற்குரியது” என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

​இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். ஒரு உயர்மட்ட அதிகாரியே இப்படி நடந்துகொள்வது, மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் சாடியுள்ளார். காவல்துறை மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் அவர் தனது ஆவேசத்தைப் பதிவு செய்துள்ளார்.