இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய விருதான ‘ஞானபீட விருது’ கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்விருதைப் பெறும் மூன்றாவது தமிழர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகள் கழித்து ஒரு தமிழருக்கு இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பின்னணி பாடகி சின்மயி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த சின்மயி, அவருக்கு வாழ்த்து தெரிவித்த திரையுலகப் பிரபலங்களை விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் பதிவுகளுக்குக் கீழ் சின்மயி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில்,
“சினிமாவில் அதிகாரம் கொண்ட ஆண்கள் அரசியலுக்குச் செல்லும்போது, பாதிக்கப்பட்ட பெண்களின் குரலைக் கேட்பதே இல்லை. அவர்கள் எப்போதும் தங்களுக்கு நெருக்கமான ஆண்கள் பக்கமே நிற்கிறார்கள்” என்று கமல்ஹாசனின் வாழ்த்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்திக்கு “அய்யோ, புரியவே புரியாதா?” என அதிருப்தியுடன் கமெண்ட் செய்துள்ளார்.
சின்மயின் இந்தப் பதிவுகள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணாக சின்மயி தொடர்ந்து நீதிக்காகப் போராடுவதை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள், சின்மயி முன்னர் வைரமுத்துவிடம் ஆசி பெற்ற பழைய வீடியோக்களைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், மற்ற பெண் கலைஞர்கள் பாதிக்கப்பட்டபோது சின்மயி ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும், கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் பாடியதைச் சுட்டிக்காட்டியும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
ஒருபுறம் தமிழருக்குக் கிடைத்த உயரிய இலக்கிய அங்கீகாரமாகக் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் ‘மீ டூ’ (Me Too) விவகாரம் மீண்டும் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளது.
