2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில்லுக்குப் பதில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மூத்த வீரர் அஸ்வின் தெரிவித்துள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது யூடியூப் சேனலில் உலகக் கோப்பைக்கான உத்திகள் குறித்துப் பேசிய அஸ்வின், அனுபவ வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராகக் களம் இறங்கும் போது, ஒருநாள் போட்டிகளில் ஏன் அதனைச் செய்யக்கூடாது? ரோகித் சர்மாவும், கோலியும் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கினால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்” என்றார்.
தற்போது இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வரும் ஷுப்மன் கில் குறித்து அஸ்வின் எவ்விதக் குறிப்பையும் வழங்கவில்லை. மாறாக, முதல் நான்கு வரிசை வீரர்களுக்கான தனது பட்டியலில் கில்லின் பெயரை அவர் தவிர்க்கவே செய்துள்ளார்.
“ரோகித் – கோலி ஜோடி தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினால், மூன்றாவது வரிசையில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த தேர்வாக இருப்பார். நான்காவது வரிசைக்கு ஸ்ரேயஸ் ஐயர் பலமான வீரர். ருதுராஜ் தொடக்க வீரராகவும் களம் இறங்கலாம் அல்லது நடுவரிசையிலும் ஆடலாம். இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் அணிக்கு அவசியம்” என அஸ்வின் வாதிட்டுள்ளார்.
🚨 Ravichandran Ashwin on YouTube:
Ashwin said, “If Rohit Sharma and Virat Kohli open in the 2027 World Cup, then Ruturaj Gaikwad and Shreyas Iyer can bat at No. 3 and 4.”
Bro casually removed captain Shubman Gill from the XI. 😭🔥 pic.twitter.com/BjuO2ElXVO
— Abhishek Kumar (@Abhishek060722) March 14, 2026
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருதுராஜ் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், சீனியர் வீரர்கள் வருகையால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அஸ்வின் போன்றோர் ருதுராஜின் நிதானமான ஆட்டம் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்குப் பொருந்தும் எனக் கருதுகின்றனர்.
மேலும் அஸ்வினின் இந்த ‘டாப் 4’ திட்டத்தில் கில்லின் பெயர் விடுபட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
