நாகர்கோவில் அருகே காதலனுக்கு நகைகளை எடுத்துக் கொடுத்ததைக் கண்டித்த தாயை, காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவிலை சுந்தர்ராஜ். இவரது மனைவி கலாவதி (42). முறுக்கு வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் பயின்று வரும் நிலையில், இரண்டாவது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்த மாணவி, அதே கல்லூரியில் பயிலும் ஒரு வாலிபரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கலாவதி தனது மகள்களின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த நகைகளில், சுமார் 10 பவுன் நகைகள் திடீரென மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது இரண்டாவது மகளிடம் அவர் விசாரித்தபோது, தனது காதலனின் அவசரத் தேவைக்காக அந்த நகைகளை அவரிடம் கொடுத்துவிட்டதாக மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலாவதி, மகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாணவியின் வீட்டிற்கு அவரது காதலன் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அருகிலிருந்த உருட்டுக்கட்டையால்கலாவதியின் தலையில் பலமாகத் தாக்கினார்.
கலாவதி நிலைதடுமாறி கீழே விழுந்ததும், மாணவியும் அவரது காதலனும் சேர்ந்து, துப்பட்டாவால் கலாவதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
கலாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கலாவதியை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
