2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணியை “மிகவும் முட்டாள் அணி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதால் தான் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
ஒருவேளை தென்னாப்பிரிக்கா அந்தப் போட்டியில் தோற்றிருந்தால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா தொடரை விட்டு வெளியேறியிருக்கும். உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், முதலில் இந்தியா போன்ற பலமான அணியைத் தொடரிலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும், ஆனால் தென்னாப்பிரிக்கா அந்த வாய்ப்பை நழுவவிட்டு இந்தியாவிற்கு வாழ்வாதாரம் அளித்துவிட்டதாக வாகன் கோபமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தான் மைக்கேல் வாகனின் இந்த ஆத்திரத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா வேண்டுமென்றே மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்று இந்தியாவை வெளியேற்றி இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு உணர்வுக்கு எதிராக வாகன் பேசியுள்ளதாகப் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். தனது சொந்த நாடான இங்கிலாந்து இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட விரக்தியில் வாகன் எல்லை மீறிப் பேசி வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
