டெல்லி செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாற்று சிறப்புமிக்க தொப்பி காணாமல் போயுள்ளதாக அவரது பேரன் சந்திரகுமார் போஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி நேதாஜி ஜெயந்தி விழாவின் போது, சந்திரகுமார் போஸ் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தத் தொப்பி பிரதமர் மோடியிடம் நேரடியாக வழங்கப்பட்டது.
பிரதமர் அந்தத் தொப்பியைப் பெற்று செங்கோட்டையில் உள்ள நேதாஜி அருங்காட்சியக நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி பெட்டியில் வைத்தார். இந்நிலையில் அண்மையில் அருங்காட்சியகத்திற்கு சென்ற நேதாஜி அமைப்பின் உறுப்பினர் ஒருவர், அந்த கண்ணாடி பெட்டி காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களால் முறையான விளக்கம் அளிக்க முடியவில்லை என்று சந்திரகுமார் போஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், நாட்டின் மிகச்சிறந்த தலைவரான நேதாஜியின் தொப்பி அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போயிருப்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்றும், தான் பிரதமரிடம் நேரடியாக வழங்கிய தொப்பி இருந்த இடம் இப்போது காலியாக உள்ளதால் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தொப்பியைப் பிரதமரிடம் வழங்கிய புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
