தற்போதைய நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட்டு வரும் வேளையில், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில ஏஜென்சிகளில் சிலிண்டர்கள் பதுக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், ஆட்டோக்களுக்குத் தேவையான எரிவாயு கிடைக்காமல் அவை முடங்கியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பொதுமக்கள் மத்தியில் நிலவும் தேவையற்ற பதற்றத்தால் ஒரே நேரத்தில் பலரும் சிலிண்டர் முன்பதிவுசெய்ய முயற்சிப்பதும், தொழில்நுட்பக் கோளாறுகளும் இந்தச் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வழக்கம்போல் முன்பதிவு செய்பவர்களுக்கு 2 அல்லது 3 நாட்களில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு தட்டுப்பாடு எப்போது சீராகும் என்பது குறித்து அகில இந்திய எல்பிஜி சங்கத்தின் இணைச் செயலாளர் வசந்த் முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, அடுத்த எரிவாயு கப்பல் வரும் மார்ச் 25-ம் தேதிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 60 சதவீத எரிவாயு வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியை 45 முதல் 65 சதவீதம் வரை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுவரை மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் குறைந்த அளவில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் வீணாகப் பதற்றமடைய வேண்டாம் என்றும், தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
