தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பார்வதா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது: “‘அசுரன்’ படத்திற்காக கென் கருணாஸை முதன்முதலில் பார்த்தபோது, அவர் உடல்வாகு காரணமாக மகனாக நடிக்க செட் ஆக மாட்டார் என்று வெற்றிமாறனிடம் கூறினேன். ஆனால், வெற்றி அவரை உடல் எடையைக் குறைக்க வைத்துத் தயார் செய்தார். படப்பிடிப்பின் முதல் காட்சியிலேயே அவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்து போனேன். கென் என்னும் கலைஞனைக் கண்டுபிடித்த பெருமை முழுக்க முழுக்க வெற்றிமாறனையே சாரும்.
அவர் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடிக்கும் திறன் படைத்தவர்” என்றார். மேலும் மேலும் தான் படத்தை இயக்கப் போவதாக கென் கூறிய போது நான் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம் என்று கூறினேன். ஆனால் அவன் என்னால் முடியும் என்று கூறினான். அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் நான் நினைச்சது தப்பு என்று புரிய வச்சிட்டான் என்று நெகிழ்ச்சியாக நடிகர் தனுஷ் கூறினார்.
