தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்ற விவகாரம், அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்காமல் நடிகை திரிஷா தவிர்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி, பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்தன.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை மும்பை செல்வதற்காக வந்த நடிகை திரிஷாவைச் சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள், “விஜய்யுடன் நீங்கள் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன; இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேள்விகளை எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விகளைக் கேட்டவுடன், எந்தவிதமான பதிலும் அளிக்காமல், மிகுந்த வேகத்துடன் விமான நிலையத்திற்குள் திரிஷா விரைந்து சென்றார். அவரிடம் தொடர்ந்து விளக்கம் கேட்க முயன்றும் அவர் மௌனம் காத்தார். நடிகை திரிஷாவின் இந்த மௌனமும், அவர் அவசரமாகச் செல்லும் காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகத் தரப்பில் இருந்தோ அல்லது தவெக தரப்பில் இருந்தோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
