மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், நடிகர் காந்தாராவின் நடிப்புத் திறனைப் புகழ்ந்து பேசுகையில், “கத்திச்சண்டையில் காந்தாராவ் மிகவும் வல்லவர்; அவரைப் பார்த்து எம்.ஜி.ஆர். கூட சிறுநீர் போகும் அளவுக்குப் பயப்படுவார்” என்று தரக்குறைவாகப் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கண்டனத்தில், “தமிழகத்தின் சிறந்த தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து நீங்கள் பேசியது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறந்த நடிகரை பாராட்டுவதை வரவேற்கிறோம், ஆனால் மற்றொரு ஜாம்பவானை மட்டம் தட்டிப் பேசியது எங்கள் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து மன்னிப்பு கோருங்கள்” என்று வலியுறுத்தியிருந்தார். நடிகர் சங்கமும் இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தனது தவறை உணர்ந்து கொண்ட நடிகர் ராஜேந்திர பிரசாத், தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அந்த விழாவில் ஜாலியாகப் பேசும் சூழலில், தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. எம்.ஜி.ஆர். சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சார் எங்களது நடிப்பைப் பார்க்க வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
அவரை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை. எனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளிக்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திர பிரசாத்தின் இந்த மன்னிப்பைத் தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
