திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். குறிப்பாக விஜிவி குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதோடு, அவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை விரட்டி விரட்டி கடித்து வருகின்றன.
நேற்று மாலை 10வது வீதியில் நடந்து சென்ற சிறுமி ஒருவரை தெருநாய் ஒன்று பாய்ந்து கடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த அந்த சிறுமி தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியை நாய் விரட்டும் அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் மட்டும் அந்த நாய் பலரை கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தெருநாய்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய்களையும் உரிமையாளர்கள் போதிய பாதுகாப்பு இன்றி பொது இடங்களில் உலவ விடுவது பொதுமக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பே ஆக்ரோஷமான நாய்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
