இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் சமூக வலைதளப் பதிவைக் குறிப்பிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபரின் சமூக வலைதளக் கணக்கைக் குறிப்பிட்டு, கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கடுமையான கண்டனத்தில் கூறியிருப்பதாவது,
“இந்தியா சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசம். கடல் கடந்து, வெகு தொலைவில் இருக்கும் அந்நிய நாடுகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் நிலையில் நாங்கள் இல்லை. இந்தியாவை ஆளும் உரிமை இந்தியர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ள கமல்ஹாசன், “அமெரிக்க அதிபரே, உங்கள் நாட்டு விவகாரங்களை மட்டும் கவனியுங்கள் என்று எச்சரித்துள்ளார். இரு இறையாண்மை கொண்ட தேசங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதையே உலக அமைதிக்கு அடிப்படை என்பதை வலியுறுத்திய அவர், அமெரிக்கா மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் அமைதியும் சுபீட்சமும் கிட்டட்டும் என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்ற தோனியில் கமல்ஹாசன் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, தற்போது தேசிய அளவில் பேசப்படும் பொருளாகியுள்ளது. வெளிநாடுகளின் இத்தகைய தலையீடுகள் இந்தியர்களின் சுயமரியாதையைச் சீண்டும் செயல் என்று பல தரப்பிலும் ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகின்றன.
