கேரள மாநிலம் திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த சாம் ஹார்ட் என்பவர் திருச்சூர் மாவட்டம் இரிஞாலக்குடாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது மதபோதகர் சாம் ஹார்ட்டுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாம் ஹார்ட் அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருமணம் செய்வதாக நம்ப வைத்து அந்தப் பெண்ணிடமிருந்து பதினாறு லட்சம் ரூபாய் பணத்தையும் சாம் ஹார்ட் பெற்றுள்ளார். ஆனால் தான் கொடுத்த வாக்குறுதியின்படி அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்பதுடன் வாங்கிய பணத்தையும் திருப்பித் தர மறுத்துள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த அந்தப் பெண் இரிஞாலக்குடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி சாம் ஹார்ட்டைக் கைது செய்தனர். பாதிரியார் ஒருவர் பெண்ணை ஏமாற்றிப் பணத்தைப் பறித்ததோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.