திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தைக் கைவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில் இதற்கு ரஜினி ரசிகர் மன்றத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் எதற்கும் அஞ்சுபவர் இல்லை என்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே அவர் அரசியலில் இருந்து விலகியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிய காலத்தில் கூட்டங்களை நடத்துவது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நம்பி வருபவர்களின் உயிரைப் பலியிடும் அற்ப அரசியலை ரஜினிகாந்த் ஒருபோதும் செய்ய மாட்டார் என்றும் தன் மீது விழும் விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு மக்களின் உயிர் காக்க அவர் எடுத்த முடிவு அவரது மனவலிமையைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிழைப்பதற்கும் ரஜினி பழிக்கப்படுவதற்கும் ரஜினி என்ற வாசகத்துடன் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.