கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒரே கல்வியாண்டில் 49 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.
மேலும் தேர்ச்சியில் நூறு சதவீத முடிவைக் காட்ட வேண்டும் என்ற நோக்கில், சரியாகப் படிக்காத மற்றும் வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவர்களைத் தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளியும் கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வாறு வெளியேறிய மாணவர்கள் பலர் தற்போது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கூலி வேலைகளுக்குச் செல்லும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இது குறித்துப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட 49 மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வியைத் தொடரச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் இத்தகைய போக்கு தவிர்க்கப்பட வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
