உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் நகரைச் சேர்ந்த குல்தீப் சுக்லா என்பவரின் மனைவி வினீதா சுக்லா அண்மையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து உறவினர்கள் மிகுந்த சோகத்துடன் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல காரில் புறப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகச் சாலையில் இருந்த ஒரு பள்ளத்தில் கார் இறங்கி ஏறியுள்ளது. அந்த அதிர்வில் வினீதா திடீரென சுவாசிக்கத் தொடங்கியதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
உடனடியாக அவரை அருகில் உள்ள ராகேஷ் சிங் என்ற மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குப் பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்துகள் வழங்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பு கடியின் போது சுரக்கும் சில நச்சுக்களால் உடல் இயக்கம் தற்காலிகமாக முடங்கிப் போக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஒரு வார கால சிகிச்சைக்குப் பிறகு வினீதா மெல்லச் சுயநினைவு பெற்றுத் தற்போது நலமுடன் உள்ளார். இதற்கிடையே சாலையில் பள்ளம் இருந்ததால்தான் தனது மனைவி உயிர் பிழைத்தார் என அவரது கணவர் கூறி வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதனை மறுத்துள்ளது. சாலையில் பள்ளங்கள் எதுவும் இல்லை என்றும் சாலை முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
