கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண் ஆசை வார்த்தைகளைக் கூறி தொழிலதிபரை ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அவர் குளிக்கச் சென்ற அந்தச் சிறு இடைவெளியில் படுக்கையில் இருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிக்கொண்டு அந்தப் பெண் தப்பியோடினார்.
இது மட்டுமன்றி மர்ம நபர்களுடன் சேர்ந்து கொண்டு அந்தத் தொழிலதிபரை மிரட்டி மேலும் பணம் கேட்டு அந்தப் பெண் நெருக்கடி கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் திலக்வாடி போலீசார் விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் சிக்கிய அந்தப் பெண் பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தீபா அவடகி என்பதும் அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரே ஒருவரைத் தயார் செய்து அந்தப் பெண்ணுடன் பேச வைத்து அவரை விடுதிக்கு வரவழைத்தனர். அங்கு மறைந்திருந்த போலீசார் தீபாவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தீபாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் சிவானந்த் என்பவரை காதலித்து வந்ததும் இருவரும் இணைந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகத் திட்டமிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை வலைவீசிப் பிடித்துப் பணம் பறித்து வந்ததும் அம்பலமானது.
கைதான பெண்ணிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் பதினொரு கைபேசிகள் உள்பட முப்பத்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள அவரது காதலனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
