ஈரான் போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டர் பெற 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க பொதுமக்கள் தற்போது மின்சார அடுப்புகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் மின்சார அடுப்பு என்பது தற்போது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது.

மின்சார அடுப்புகளுக்கான தேவை சந்தையில் திடீரென 300 சதவீதம் உயர்ந்துள்ளதால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமேசான் தளத்தில் மின்சார அடுப்புகளின் விற்பனை 20 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் உடனடி விநியோக செயலிகளிலும் மின்சார அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகர்ப்புறங்களில் இந்த அடுப்புகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.