பொதுவாக இட்லி என்றாலே அதற்குத் தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி கட்டாயம் தேவை. ஆனால், எந்தவித துணை உணவுகளும் இன்றி, இட்லியை அப்படியே ரசித்துச் சாப்பிடலாம் என்றால் எப்படி இருக்கும்? ஆம், இட்லிக்குள்ளேயே மசாலாவை அடைத்துச் செய்யும் புதிய வகை ‘மசாலா இட்லி’ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது இதற்கு தேவையான பொருட்கள்,
-
ரவை: 1 கிண்ணம்
-
தயிர்: அரை கிண்ணம்
-
காய்கறிகள் (கேரட், குடைமிளகாய், வெங்காயம்): பொடியாக நறுக்கியது
-
உருளைக்கிழங்கு: வேகவைத்தது
-
தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
-
இதர பொருட்கள்: உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், ஈனோ (Eno)
செய்முறை:
மிக்ஸி ஜாரில் ரவை, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துச் சேர்த்துக் கிளறவும். இந்த மசாலாவை சிறு உருளைகளாக (நீளமாக) உருட்டி வைத்துக் கொள்ளவும்.
View this post on Instagram
தயார் செய்த இட்லி மாவில் சிறிதளவு ஈனோ சேர்த்து கலக்கவும். பெரிய கண்ணாடி கிளாஸ்களில் எண்ணெய் தடவி, அதில் பாதி அளவு மாவை ஊற்றவும். அதன் நடுவில் செய்து வைத்துள்ள மசாலா உருண்டையை நிறுத்தி வைத்து, அதன் மேல் மீண்டும் மாவை ஊற்றவும். இந்த கிளாஸ்களை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து, ஆறிய பிறகு வட்டமான துண்டுகளாக வெட்டினால், சுவையான ‘மசாலா ஸ்டஃப்டு இட்லி’ தயார்!
இதற்குள் மசாலா அடைக்கப்பட்டுள்ளதால், இதற்குத் தனியாகச் சட்னி, சாம்பார் தேவைப்படாது. சுவை மிகுந்த இந்த இட்லியைப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கட்டி அனுப்பவும் இது ஒரு சிறந்த தேர்வாகும். மேலும் ‘aapli_sakhi’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நீங்களும் இந்த வித்தியாசமான முறையை முயற்சி செய்து பாருங்கள்!
