உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரைக் கழுத்தை நெரித்துக் கொன்று, வீட்டின் அருகே ரகசியமாகப் புதைத்த மருமகள் மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுராவைச் சேர்ந்த ஆமிர் என்பவரின் மனைவி ஹீனா. ஆமிர் வேலை நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்த நிலையில், ஹீனா தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஆதில் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில் ஆதில் அடிக்கடி ஹீனாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
கடந்த மார்ச் 2-ஆம் தேதி நள்ளிரவு, காதலன் ஆதில் ஹீனாவின் வீட்டிற்கு வந்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஹீனாவின் மாமியார் அன்வரி (வயது 65) கண் விழித்தார். அப்போது, தனது மருமகள் அந்நிய நபருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஹீனாவை கடுமையாகச் சாடியதுடன், இந்தச் செயலை அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.
தன்னுடைய கள்ளக்காதல் விவகாரம் ஊர் முழுவதும் தெரிந்துவிடும் என்ற பயத்தில், ஹீனாவும் அவரது காதலன் ஆதிலும் ஆத்திரமடைந்தனர். இருவரும் சேர்ந்து அன்வரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். தங்களது குற்றத்தை மறைக்க, மிகவும் சாமர்த்தியமாக வீட்டின் அருகிலேயே ஒரு பள்ளம் தோண்டி மாமியாரின் உடலைப் புதைத்தனர். அன்வரி இயற்கை மரணம் அடைந்ததாகக் கூறி மற்றவர்களை நம்ப வைக்க முயன்றனர்.
அன்வரியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த மருமகள் ஹீனாவின் நடவடிக்கைகள் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக நீதிபதியின் முன்னிலையில், புதைக்கப்பட்டிருந்த அன்வரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் அவர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஹீனா மற்றும் ஆதில் ஆகிய இருவரும் சேர்ந்து கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மாமியாரைக் கொன்ற மருமகள் ஹீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆதில் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ளக்காதலுக்காக மாமியாரையே மருமகள் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
