ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள தூது பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும், தனது 8 வயது மகளையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களது சடலங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் உள்ள பிச்சூன் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த நபர். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த நபர், வீட்டில் இருந்த வாளை எடுத்துத் தனது மனைவி மற்றும் 8 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலையைச் செய்த பின்பும் அவர் அங்கிருந்து தப்பிச் செல்லவில்லை. மாறாக, அதிகாலை வரை ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மனைவி மற்றும் மகளின் சடலங்களுக்கு அருகிலேயே 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைதியாக அமர்ந்திருந்துள்ளார். மறுநாள் வியாழக்கிழமை காலை 7 மணியளவில், நடைப்பயிற்சி மேற்கொண்ட கிராமவாசிகள் வீட்டின் அருகே சென்றபோது, அந்த நபர் வெளியே வந்து, “நான் எனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டேன்” என்று மிகவும் அமைதியான குரலில் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையெங்கும் ரத்தம் சிதறி கிடந்ததையும், தாய்-மகள் இருவரும் சடலங்களாகக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களைச் சேகரித்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் தூது துணை மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத் தகராறில் தம்பதியரிடையே ஏற்பட்ட சிறு சண்டை, இவ்வளவு பெரிய கொடூரத்திற்கு வழிவகுத்தது எப்படி என்பது குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
