மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இளம்பெண்ணின் வீட்டார் அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்ததால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தனது காதலனுடன் ஊரை விட்டு ஓடிச் செல்லத் திட்டமிட்டார். திட்டமிட்டபடி மும்பை சென்ற இளம்பெண் அங்குத் தனது காதலனை வரவழைத்து இருவரும் சூரத் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே சிறுவன் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சூரத் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் அமர்ந்திருந்த இருவரையும் பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்தபோது உண்மை அம்பலமானது.

இதனையடுத்து சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.