போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஐனஸ் பாரியா என்ற பெண் பயணி பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அனுபவங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் இந்தியா வந்திருந்த அவர் தனது தோழியுடன் ரயிலில் பயணம் செய்தபோது நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்தபோது தங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் நீண்ட நேரமாகத் தங்களை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்ததாகவும் இதனால் தாங்கள் பெரும் அசௌகரியத்திற்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் தான் கழிவறைக்குச் சென்றபோது அந்த இளைஞர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வந்து கதவைத் திறக்க முயன்றதாகவும் அப்போது தனது தோழி அங்கு வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ரயிலில் இருந்த பயணச் சீட்டு பரிசோதகரிடம் புகார் அளித்ததையடுத்து அவர் தங்களை வேறு பாதுகாப்பான பெட்டிக்கு மாற்றியதாக ஐனஸ் பாரியா கூறியுள்ளார்.
மும்பை வீதிகளில் தான் நடந்து சென்றபோதும் சிலர் தன்னைத் தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கக் கோரி தொந்தரவு செய்ததாக அவர் தனது மற்றொரு பதிவில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
