மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் 2026-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிரடியான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக, ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி போன்ற ‘தீர்வு சார்ந்த திட்டங்கள்’ ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ‘லைஃப் சைக்கிள் ஃபண்ட்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய வகை நிதிகள், முதலீட்டாளரின் வயது மற்றும் இலக்குக்கு ஏற்ப, தொடக்கத்தில் அதிக ரிஸ்க் உள்ள பங்குகளில் முதலீடு செய்து, முதிர்வுக் காலம் நெருங்கும்போது தானாகவே பாதுகாப்பான கடன் பத்திரங்களுக்கு முதலீட்டை மாற்றும் ‘கிளைடு பாத்’ முறையைப் பின்பற்றும். இது முதலீட்டாளர்களின் பணத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. மற்றொரு முக்கிய மாற்றமாக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் ‘வேல்யூ’ மற்றும் ‘கான்ட்ரா’ ஆகிய இரண்டு திட்டங்களையும் நடத்த செபி அனுமதித்துள்ளது.

ஆனால், இந்த இரண்டு திட்டங்களின் போர்ட்ஃபோலியோக்களுக்கு இடையே 50% மேல் ஒற்றுமை இருக்கக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஈக்விட்டி ஃபண்டுகள் தங்களின் மொத்த முதலீட்டில் 35% வரை தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த கருவிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது, இது சந்தை ஏற்ற இறக்கங்களின் போது முதலீட்டைப் பாதுகாக்க உதவும்.

இந்நிலையில் முதலீட்டுச் செலவுகளைக் குறைக்க, மொத்தச் செலவு விகிதத்தை கணக்கிடும் முறையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பெயர்களில் திட்டங்களை விற்பனை செய்வதைத் தடுத்து, முதலீட்டாளர்களுக்குச் சரியான புரிதலையும் பாதுகாப்பையும் வழங்குவதை செபி நோக்கமாகக் கொண்டுள்ளது.