திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அதே தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கண்ணூர் முதல் யஷ்வந்த்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்துள்ளனர். தியாகராஜனுடன் அவரது மகளும் உடன் வந்துள்ளார். ரயிலில் பயணம் செய்தபோது தியாகராஜனின் மகள் நீண்ட நேரமாகத் தனது இருக்கைக்கு வராததால் அவரைத் தேடி முகேஷ் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் இருவரும் வராததால் சந்தேகமடைந்த தியாகராஜன் அவர்களைத் தேடிச் சென்றபோது ரயில் பெட்டியின் வாசல் பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதில் ஏற்பட்ட கோபத்தில் முகேஷை தியாகராஜன் பலமாக எட்டி உதைத்ததில் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சக பயணிகளுக்குத் தெரியாமல் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முகேஷைக் காணவில்லை என்று தியாகராஜனே போலீசில் புகார் அளித்துள்ளார். ரயில்வே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பாலக்காடு அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் முகேஷ் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த வழக்கில் தியாகராஜனின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது மகளுடன் பேசிய ஆத்திரத்தில் முகேஷை ரயிலில் இருந்து தள்ளிக் கொன்றதை தியாகராஜன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
