உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் வினீதா சுக்லா கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நிலைமை மோசமடைந்ததால் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரது மூளை செயலிழந்து விட்டதாகவும் அவர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் குடும்பத்தினர் மிகுந்த சோகத்துடன் அவரை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தனர்.

இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பரேலி மற்றும் ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் சென்றபோது அங்குள்ள ஒரு பெரிய பள்ளத்தில் வாகனம் ஏறி பலமாக குலுங்கியது.

அந்த நேரத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட வினீதா சுக்லா திடீரென சுவாசிக்கத் தொடங்கினார். இந்த அதிசய நிகழ்வைக் கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்து தனது குடும்பத்தினருடன் பேசும் நிலைக்குத் திரும்பியுள்ளார்.