கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் அனில் குமார் நாயக் என்ற செய்தியாளர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி ஊடகவியலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வினோபா நகர் பகுதியில் அனில் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் பணியாற்றியுள்ள அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அனில் குமாரின் மறைவிற்குச் சிவமோகா பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஊடக அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
