கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருந்ததே இந்த உடல்நலக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் மாணவர்களின் உடல்நிலை தற்பொழுது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசைத் திட்டித் தீர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தில் திமுக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சத்துணவு போன்ற மிக முக்கியமான திட்டத்தில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் உயிர் விஷயத்தில் விளையாடும் இத்தகைய போக்கைக் கைவிட்டு அவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
