அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள பாகிஸ்தான் அரசு, அரசு அலுவலகங்களை வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே இயங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதேபோல் வியட்நாமிலும் எரிபொருள் சிக்கனத்திற்காக ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய (Work from Home) அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அரசு நிலைமையை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகிறது. எல்.பி.ஜி எரிவாயு விநியோகம் கடந்த சில நாட்களில் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி (IOC), ஹெச்.பி.சி.எல் (HPCL), பி.பி.சி.எல் (BPCL) ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, ஹோட்டல் சங்கங்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஹார்முஸ் வளைகுடாப் பாதையில் சிக்கல் இருப்பதால், மாற்றுப் பாதைகள் மூலம் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 70 சதவீதத்தைப் பெற்று வருகிறது. இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதால், பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடையுமில்லை என்றும் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.