அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து ஆந்த்ரோபிக் நிறுவனம் அண்மையில் வெளியேறியது. ராணுவ உளவு வேலைகளுக்குத் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் மறுத்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகனின் ‘சப்ளை செயின் ரிஸ்க்’ பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளைப் பகுதியளவு முடக்கியுள்ளது.
இந்தப் பட்டியலிலிருந்து விலக்கு பெறுவதற்காக, அந்த நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி கடந்த காலங்களில் டிரம்ப் குறித்துப் பேசிய விமர்சனங்களுக்கு தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆந்த்ரோபிக் வெளியேறிய அந்தப் பெரிய ஒப்பந்தத்தை தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால், பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவு தலைவரான கைட்லின் கலினோவ்ஸ்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த நவம்பரில்தான் மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி ஓபன் ஏஐ-இல் இணைந்த இவர், சரியான சட்ட மேற்பார்வையின்றி குடிமக்களை உளவு பார்ப்பதற்கும், தானியங்கி ஆயுதங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஓபன் ஏஐ நிர்வாகம், தேசிய பாதுகாப்பிற்காக மட்டுமே பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. உள்நாட்டு உளவு வேலைகளுக்கோ அல்லது மனிதக் கட்டுப்பாடு இல்லாத தானியங்கி ஆயுதங்களைத் தயாரிப்பதற்கோ எங்களது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என்று அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது குறித்து அரசு மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
