உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், ரயில்வே லோகோ பைலட் பிரஜேஷ் மௌரியா மற்றும் அவரது தாய் சரிதா தேவி ஆகியோர், பிரஜேஷின் மனைவி அனிதா மற்றும் அவரது சகோதரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 2025 காதலர் தினத்தன்று காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்குள், திருமணமான சில காலத்திலேயே விரிசல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஏற்பட்ட தகராறில், அனிதா தனது கணவர் பிரஜேஷை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியுள்ளார்.

இதைத் தடுக்க வந்த மாமியார் சரிதா தேவியையும் அவர் விடவில்லை. மேலும், தனது சகோதரனை வரவழைத்து தடி மற்றும் கட்டைகளால் கணவரையும் மாமியாரையும் சரமாரியாகத் தாக்கியதோடு, வீட்டிலிருந்த கதவு, விளக்குகள் மற்றும் சமையலறைப் பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆண்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இது குறித்து நவாப்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.