சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில், டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காத்கோடம் ரயில் நிலையத்திலிருந்து நைனிடால் செல்வதற்காக ஒரு வெள்ளை நிற வேகன் ஆர் டாக்ஸியில் அந்தப் பெண் ஏறியுள்ளார். ஆனால், செல்லும் வழியில் பல்டியாக்கான் என்ற இடத்தில் கார் சென்றபோது, டாக்ஸி டிரைவர் திடீரென தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார்.

அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அந்த டிரைவர், அவர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

அந்த நபரிடமிருந்து  தப்பிக்கப் போராடிய இளம்பெண், ஒருகட்டத்தில் காரிலிருந்து குதித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஓடி உயிர் தப்பியுள்ளார்.

பயத்தில் உறைந்துபோன அந்தப் பெண், இரவு முழுவதும் சாலையோரமிருந்த ஒரு சிறிய கல்வெட் (குழாய் போன்ற பகுதி) உள்ளே ஒளிந்து கொண்டு விடிய விடியக் காத்திருந்துள்ளார்.

காலையில் எப்படியோ தட்டுத்தடுமாறி மெயின் ரோட்டிற்கு வந்தவரைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தற்போது அந்தப் பெண்ணின் செல்போன் மற்றும் உடமைகளுடன் தப்பியோடிய காமவெறி பிடித்த டிரைவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.