மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் அருகே உள்ள பாப்காவ் பகுதியில், ஒரு பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்துள்ள கொடுமை ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குழந்தை இல்லாத ஒரு தம்பதி, தனது நண்பரின் மனைவி இறந்ததால் அவரது 3 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
ஆனால், தில்ஷாத் ஷேக் என்ற அந்த வளர்ப்புத் தாய், அந்தக் குழந்தையை ஒரு மனுஷியாகக்கூட மதிக்காமல் மிருகத்தனமாகச் சித்ரவதை செய்துள்ளார். பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை அந்தச் சிறுமி தெரியாமல் ‘அம்மா என்று அழைத்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
ஆத்திரமடைந்த அந்தப் பெண், சிறுமியை சரமாரியாக அடித்துத் துவைத்தது மட்டுமின்றி, யாரும் செய்யத் துணியாத காரியமாக அந்தப் பிஞ்சுவின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவியுள்ளார்.
வலியால் அந்தச் சிறுமி அலறித் துடித்தும், கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். இந்த கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பிவண்டி போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
