புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுச்சேரியில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுகவும் புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் என்றும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே நடைமுறையே புதுச்சேரியிலும் பின்பற்றப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
கூட்டணி என்பது தியாகத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் தியாகம் இல்லாவிட்டால் அங்கு முறையான கூட்டணி அமையாது என்றும் கிரீஷ் சோடங்கர் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பது இயல்புதான் என்றாலும் பேச்சுவார்த்தை மூலம் அதற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக காங்கிரசுக்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிமூன்று தொகுதிகளில் போட்டியிட்டு தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள புதுச்சேரி திமுக இந்த முறை தனது தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த கால் நூற்றாண்டுகளாகப் புதுச்சேரியில் திமுக பங்கேற்ற ஆட்சி அமையாத நிலையில் கிரீஷ் சோடங்கரின் இந்தப் பேச்சு திமுகவின் எதிர்பார்ப்புக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உள்ளது. இதனால் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்பதில் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது.
