கடந்த 2020ம் ஆண்டு ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க அந்த நாடு சபதம் செய்திருந்தது. இந்தச் சூழலில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவிலிருந்து தப்பிக்க முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் ரஸா மெர்சண்ட் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பான வழக்கு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த விசாரணையின் போது ஆசிப் ரஸா அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசித்து வரும் தனது குடும்பத்தினரை அந்நாட்டின் புரட்சிகர காவல்படையினர் கடத்தி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினரை விடுவிக்க வேண்டுமானால் அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் தம்மை மிரட்டியதாக அவர் கூறியுள்ளார். இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹாலே ஆகிய மூவரில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதற்கான அடியாட்களைத் தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் தாம் யாரையும் கொலை செய்ய விரும்பவில்லை என்றும் இந்தப் முயற்சியின் போது தாம் பிடிபட்டுவிடுவோம் என்று நம்பியதாகவும் ஆசிப் ரஸா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது சர்வதேச பயங்கரவாதம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சதித்திட்டம் குறித்த விசாரணை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.