மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஏவுகணைகள் மழையெனப் பொழிந்ததில் விமான நிலையத்தின் பெரும் பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியதுடன், அங்கிருந்த ஓடுதளங்கள் மற்றும் போயிங் 747 உள்ளிட்ட பல விமானங்கள் தீயால் கடுமையாக சேதமடைந்தன.
மேலும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற போதிலும், பாதிப்புகளைத் தவிர்க்க இயலவில்லை எனத் தெரிகிறது. இந்தத் தாக்குதலால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் மெஹ்ராபாத் விமான நிலையம் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கும் ஒரு முக்கிய மையமாகத் திகழ்வதால், இந்தத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்திலிருந்து பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கித் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் முழுமையான சேத விவரங்கள் குறித்து ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மத்திய கிழக்கு நாடுகளிடையே போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
