தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாற்றுத்திறனாளி மற்றும் வடமாநில தொழிலாளி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், சிவகங்கையில் பொதுமக்களைக் கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டியது மற்றும் கோவையில் உதவி ஆய்வாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அடுத்தடுத்து நடந்த வன்முறைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறையினரையே தாக்கும் அளவிற்குச் சமூக விரோதிகளின் துணிச்சல் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூட்டணி ஒப்பந்தத்தின்போது செய்த ‘ஓவர் ஓவர்’ என்ற கையசைப்பைச் சட்டம்-ஒழுங்கு நிலையுடன் ஒப்பிட்டு ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அந்தச் சைகை ‘எல்லாம் முடிந்துவிட்டது’  என்பதைப் போல வைரலானதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிஜமாகவே கைமீறிப் போய்விட்டதைக் குறிப்பதாகவே மக்கள் அதைப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.