தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் இடையே “ரகசிய உடன்பாடு” இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொடநாடு வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் திமுக அரசு காட்டும் மெத்தனப் போக்கு, எடப்பாடி பழனிசாமியைப் பாதுகாக்கும் முயற்சியோ என்ற சந்தேகத்தை அதிமுகவினரிடையே கிளப்பியுள்ளது.
குறிப்பாக, ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா போன்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க பாஜாக மேலிடம் வலியுறுத்தியும், கட்சியைத் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி அதைத் தவிர்த்துவிட்டார். இதனால் அதிமுக பலவீனமடைந்து, இந்தத் தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெற அவர் வழிவகை செய்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், தேர்தல் செலவுகளுக்காக டெல்லி பாஜக கொடுத்த சுமார் 2,000 கோடி ரூபாயை எடப்பாடி பழனிசாமி செலவு செய்யாமல் பதுக்கி வைத்துள்ளதாகவும், வேட்பாளர்களிடமே தலா 15 கோடி ரூபாய் வரை பணம் கேட்பதாகவும் ஒரு மூத்த அதிமுக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்பு முதலமைச்சராக இருந்தபோது தொழிலதிபர்களிடம் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டியிருக்கும் என்பதால், அவர் மீண்டும் முதலமைச்சராக விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
திமுகவுக்கு எதிராகப் பெரிய போராட்டங்களை நடத்தாமல் வெறும் அறிக்கைகளுடன் அவர் நிறுத்திக் கொள்வது பாஜக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த “உள்ளடி” வேலைகளால் அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
