திமுகவில் இணைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களையும் ஆளுங்கட்சி பக்கம் இழுக்கத் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அவருக்குப் பெரிய அதிர்ச்சி தரும் வகையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுக பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ. ராமசாமியின் மகன் டி.ஆர். சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த திடீர் திருப்பம் ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு பலத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தனது பலத்தை நிரூபிக்க திமுகவில் இணைந்த அவருக்கு, சொந்த ஆதரவாளர்களே எடப்பாடி பக்கம் செல்வது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுக நோக்கிப் படையெடுக்கத் தயாராகி வருவதால், ராமநாதபுரம் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
