பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் பதவி தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். பட்ஜெட்டிற்குப் பிறகு தாம் முதலமைச்சர் பதவிக்காக எந்தவிதப் புரட்சியிலும் ஈடுபடப்போவதில்லை என்றும் தனது போராட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல மாறாகக் கட்சிக்காக மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமக்குத் தம் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் பதவிக்காகத் தாம் அலைந்து திரிய வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி காலியாக இருந்தால் மட்டுமே வேறு ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்க முடியும் என்று குறிப்பிட்ட அவர் முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகுவார் என்று தாம் எங்கும் கூறவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு எந்தச் சூழலிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு கட்சிக்கு அநீதி இழைக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். தாம் மிகுந்த பொறுமையுடன் இருப்பதாகவும் கஷ்டப்பட்டுப் பார்த்துப் பார்த்துக் கட்டி எழுப்பிய கட்சிக்குத் தம்மால் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுயநலத்திற்காக ஒருபோதும் அச்சுறுத்தும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கட்சியின் நலனே தமக்கு முக்கியம் என்றும் டி.கே.சிவக்குமார் தனது பேட்டியின் போது விரிவாக எடுத்துரைத்தார்.