ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் டெல்லியில் அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

கடந்த மாதம் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் உருவாகி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் அங்குள்ள இந்தியர்களுக்கு உதவ, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் பிரத்யேக உதவி எண்களை (1800118797, +91 11 23012113) மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் நிலவரத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்து வருவதோடு, அங்குள்ள அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.