நாடு முழுவதும் ஹோலி மற்றும் அதன் தொடர்ச்சியான வண்ணத் திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மனசாட்சியை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாட்டாகத் தன் மீது வண்ணம் தெளித்த 4 வயதுப் பேரனின் மீது, ஆத்திரமடைந்த பாட்டி கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரின் கோராடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் வாங்கேயின் மகன் ஓம் (வயது 4). ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறுவன் ஓம், தனது வீட்டின் முன் உள்ள பகுதியில் நண்பர்களுடன் உற்சாகமாக வண்ணங்களை விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அவனது பாட்டி சிந்து தாக்கரே, ஒரு வாளி நிறைய கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு அப்பகுதியைக் கடந்து சென்றார். அப்போது சிறுவன் ஓம், தனது கையில் இருந்த தண்ணீர் துப்பாக்கி மூலம் பாட்டியின் மீது விளையாட்டாக வண்ணத் தண்ணீரைத் தெளித்துள்ளான்.

தன் மீது வண்ணம் பட்டதால் கடும் கோபமடைந்த சிந்து தாக்கரே, சற்றும் யோசிக்காமல் தனது கையில் இருந்த ஒரு வாளி கொதிக்கும் நீரை அப்படியே அந்தப் பிஞ்சு பாலகனின் மீது ஊற்றினார். இதில் சிறுவனின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. வலியால் அலறிய சிறுவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றி முதலுதவி செய்தனர்.

இந்தக் கொடூரச் செயல் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், பாட்டி ஆத்திரத்துடன் பேரனின் மீது சுடுதண்ணீரை ஊற்றுவது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சிறுவன் ஓம் சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தந்தை ஹரிஷ் வாங்கெ, இந்திய நிலக்கரி நிறுவனத்தில் (WCL) பணியாற்றி வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சொந்தப் பேரனின் மீது இவ்வளவு கொடூரமான தாக்குதலை நடத்திய பாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.