மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 28 வயதுடைய இளம்பெண் ஒருவரை அவரது மாமனாரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணிற்கு கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஆண்டிற்கு இருமுறை மட்டுமே அவர் ஊருக்கு வந்து செல்லும் நிலையில், அந்தப் பெண் குவாலியரில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று, வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்த கணவர், தனது அத்தையுடன் வெளியே சென்றிருந்தார். அன்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், அந்தப் பெண் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் தவறாகத் தீண்டுவதை உணர்ந்து கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அவரது மாமனார் படுக்கையில் அமர்ந்து அநாகரீகமாக நடந்துகொண்டது தெரியவந்தது.
இதனைத் தட்டிக்கேட்டு அவர் சத்தம் போட முயன்றபோது, மாமனார் அந்தப் பெண்ணின் வாயைப் பொத்தி, கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த அந்தப் பெண், தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானார்.
மறுநாள் காலை, நடந்த விபரங்கள் அனைத்தையும் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் அந்தப் பெண் அழுது கொண்டே கூறியுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் குடும்பத்தின் கௌரவம் கருதி இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் மௌனமாக இருக்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். மேலும், விரைவில் தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவர் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
தனது கணவர் வீட்டாரின் போக்கினால் அதிருப்தி அடைந்த அந்தப் பெண், இது குறித்துத் தனது பெற்றோருக்குத் தகவல் அளித்தார். அவர்களின் உதவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். மேலும் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
