பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-வது முறையாக பீகார் மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற நிதிஷ்குமார், தற்பொழுது அந்தப் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எனக்கு பதவியின் மீது எந்தவிதமான ஆசையும் இல்லை. மக்களவை உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ நீடிக்க நான் விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினாலும், கட்சியின் வளர்ச்சிக்காக மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது இந்த முடிவும் முழுக்க முழுக்க கட்சிக்காக எடுக்கப்பட்டதுதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த திடீர் முடிவைத் தொடர்ந்து, பீகாரில் புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. “புதிதாக அமையும் ஆட்சிக்கு எனது முழு ஆதரவை அளிப்பேன்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நிதிஷ்குமாரின் இந்த விலகல் முடிவு பீகார் மட்டுமின்றி தேசிய அளவிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பீகார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்றும் நித்திஷ் குமாரின் மகன் துணை முதலமைச்சர் ஆவார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 20 வருஷங்களாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் இன்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.