மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில், வரும் மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் பூமி பூஜை நேற்று ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று அனைவரையும் வரவேற்க உள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாகப் புகழ்ந்து தள்ளினார்.
வரவிருக்கும் தேர்தலிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, மீண்டும் இந்த ஆட்சியே அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அதிமுக தொண்டர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணையத் தயாராக இருப்பதாகவும், பதவி சுகத்திற்காகக் கட்சி மாறுகிறார் என்ற விமர்சனங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்றும் அவர் அதிரடியாகக் கூறினார்.
